போலி மருந்து தயாரித்த வழக்கு…கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ஜாமின்
போலி மருந்து தயாரித்து விற்பனை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராஜா,முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உட்பட சிறையில் உள்ள 24 பேருக்கும் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் போலி மாத்திரை உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பியது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மேட்டுப்பாளையம், திருபுவனைபாளையம் ஆகிய இடங்களில் 2 தொழிற்சாலைகள், தவளக்குப்பம் பகுதியில் 2 வீடுகள், குடோன்கள், மொத்த மருந்தகம் என 13 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
அங்கிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போலி மாத்திரைகள், அதனை தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் போலி மாத்திரை தொழிற்சாலை உரிமையாளரான ராஜாவை (வயது42) போலீசார் கைது செய்தனர்.
புதுவை மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் 57 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 பேருக்கு ஜாமீன்
இதற்கிடையே கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த 22-ந் தேதி சி.பி.ஐ. மற்றும் என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்தார். இந்த நிலையில் போலி மாத்திரை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விரைவில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே சிறையில் உள்ள ராணா,மெய்யப்பன் ஆகிய 2 பேரும் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த நிலையில் சிறையில் உள்ள ராஜா உள்பட 24 பேரும் ஜாமீன் கேட்டு புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் அவர்கள் 24 பேருக்கும் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.


