மதுரை பாண்டிகோவில் அறுபடை வீடுகளின் கண்காட்சி
தமிழக அரசு எந்த நோக்கத்தில் முருகன் மாநாடு நடத்தியதோ, அதே நோக்கத்தில் தான் முருக பக்தர்களின் மாநாடும் நடத்தப்படுகிறது என மதுரையில் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி.

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளின் கண்காட்சி துவக்கப்பட்டது, துவக்க நிகழ்வில் இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வர சுப்பிரமணியம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முருகனின் அறுபடை கோயில்களின் மூலஸ்தானமும், முகப்புடனும் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்கில் அந்தந்த கோயில்களில் வைத்து வழிபட்ட வேல் பிரார்த்தனைக்கு வைக்கப்பட்டது.

ஒவ்வொரு கோவிலின் சிறப்புகள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜூன் 22 அன்று பிற்பகலில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக உரைகள், சிறப்புரைகளுடன் மாநாடு நடைபெறவுள்ளது.
அன்று மாலை 6 மணிக்கு லட்சக்கணக்கானோர் கந்த சக்ஷ்டி கவசம் பாடும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “முருக பக்தர்கள் மாநாடு அரசியல் சார்பற்றது.
அரசியல் உள்நோக்கம் இல்லாதது. ஆன்மீகத்தின் மீதும், முருகன் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் கலந்து கொள்கிற மாநாடு. அமித்ஷா ஒரு ஆன்மீக அன்பராக மக்களிடத்தில் மாநாட்டை சிறப்பாக நடத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அவரை பாஜக தலைவராக பார்ப்பது அபத்தமானது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கூட அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டிருக்கிறோம். அவர் இன்னும் நேரம் கொடுக்கவில்லை.

மலை இருக்கும் இடமெல்லாம் முருகனுக்கு சொந்தமானது. தமிழக அரசு எந்த நோக்கத்தில் முருகன் மாநாடு நடத்தியதோ, அதே நோக்கத்தில் தான் முருக பக்தர்களின் மாநாடும் நடத்தப்படுகிறது. இதில் எந்த பிளவுவாத நோக்கமும் கிடையாது” என கூறினார்.


