காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த டாக்டர் : வீட்டில் அடைத்து வைத்த நர்ஸ் குடும்பம்
ராமாபுரத்தில் காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் நர்ஸ் குடும்பத்தினரால் அடைத்து வைக்கப்பட்ட மருத்துவர் மீட்கப்பட்டார்.
சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரா (22). இவர் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சபரி கிளினிக்கில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கயல்விழி (29) ஆகிய இரண்டு மருத்துவர்கள் இணைந்து அந்த கிளினிக்கை நடத்தி வந்துள்ளனர்.
சுசீந்திரா மற்றும் சதீஷ்குமார் இடையே பழக்கம் உருவாகியது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுசீந்திரா கேட்க அதற்கு சதீஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த செவிலியர் சுசீந்திரா கிளினிக்கில் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து செவிலியர் சுசீந்திராவை அவரது வீட்டில் விடுவதற்காக சதீஷ்குமார் மற்றும் கைவலி ஆகிய இருவரும் ராமாபுரம் வந்துள்ளனர். வீட்டில் இறக்கி விடும்போது சதீஷ்குமாரை சுற்றி வளைத்த சுசீந்திராவின் உறவினர்கள், அவரது வாழ்க்கைக்கு வழிகூறாமல் செல்லக்கூடாது என வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.
இது தொடர்பாக ராமாபுரம் காவல் நிலையத்தில் மருத்துவர் கயல்விழி புகார் அளித்தார். உடனே சுசீந்திரவின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மருத்துவர் சதீஷ்குமாரை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.


