எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறான கார்ட்டூன்..தனித்தனியே 3 புகார்.
எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறான கார்ட்டூன். சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது அதிமுக எம்எல்ஏ புகார். ஊர்வலமாக வந்து முழக்கமிட்டு தனித்தனியே 3 புகார்களை அளித்தனர்.
கீழடி அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது தொடர்பாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து கருத்து பதிவிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இந்நிலையில் அதிமுக சார்பில் இன்று திமுக ஐடி வின் பொறுப்பாளரும், தமிழக தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் 3 புகார்கள் அளிக்கப்பட்டது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான கே.ஏ. பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் சுமார் 200 பேர் இன்று ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிதம்பரம் நகர காவல் நிலையம் முன் முழக்கமிட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதிமுக எம்எல்ஏ கே.ஏ. பாண்டியன், கடலூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் குணசேகரன், சிதம்பரம் நகர அதிமுக ஐடி விங் செயலாளர் மணிராஜ் ஆகிய 3 பேரும் தனித்தனியே நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட திமுக ஐ.டி.விங் பொறுப்பாளர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் இந்த கார்ட்டூனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த புகாரை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பெற்றுக் கொண்டார்.


