இரண்டு கோடி மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் துவக்கம்
மதுரை உலக பிரசித்தி பெற்ற வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி இரண்டு கோடி மதிப்பில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் துவக்கம் – பெருமூச்சு விடும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், வாகன ஓட்டிகள்
மதுரையில் பிரசித்தி பெற்ற ஆன்மீகத்தனமாகவும் வெளியூர் மக்களை கவரும் சுற்றுலா தலமாகவும் உள்ள மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அமைந்திருக்கும் கோவிலுக்கு என பல்வேறு சிறப்புகள் உள்ளது.
அதேபோல மதுரை மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களை கழிக்கும் இடமாக உள்ள தெப்பக்குளம் பகுதியை சுற்றி காலை மாலை என இருவேளையும் நூற்றுக்கணக்கானோர் உடறபயிற்சியும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். .
குறிப்பாக இந்த தெப்பக்குளத்தை சுற்றி அரசு உதவி பெறும் நான்கு பள்ளிகள், இரண்டு கல்லூரிகள் அமைந்துள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் தெப்பக்குளத்தை சுற்றி உள்ள சாலையின் நிலையோ மிகவும் மோசமாக பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் தொடர்ச்சியாக புகார்களும் மாநகராட்சிக்கு சென்றும் மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்க மறுத்து வந்தது.
அண்மையில் இது குறித்து சட்டமன்றத்தில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அப்போது முதல்வர் நிச்சயம் புது சாலை தெப்பக்குளத்தை சுற்றி அமைக்கப்படும் என கூறியிருந்த நிலையில் இன்று அதற்கான பணிகள் துவங்கியுள்ளது.
சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ள புதிய தார் சலையால் மீண்டும் தெப்பக்குளம் பகுதி புத்துயிர் பெற உள்ளது. பல ஆண்டாக மிகவும் மோசமான இந்தக் குண்டு குழி சாலையை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் புது சலை தெப்பக்குளத்தை சுற்றி அமைக்க இருப்பதால் பெருமூச்சு விடுகின்றனர்.
அத்தோடு பணிகளை துரிதப்படுத்தி விரைவாக புதிய சாலை அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.