இதய ஒத்திசைவு சிகிச்சை – டிபிப்ரிலேட்டர் சாதனம் வெற்றிகரமாக பொருத்தம்
தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 43 வயது நபருக்கு இதய ஒத்திசைவு சிகிச்சை – டிபிப்ரிலேட்டர் சாதனம் வெற்றிகரமாக பொருத்தம்
கல்லூரி முதல்வர் பூவதி தகவல்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் பூவதி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 43 வயது ஆண் ஒருவருக்கு இதய ஒத்திசைவு சிகிச்சை – டிபிப்ரிலேட்டர் என்னும் சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேத்லேப் ( இருதய உட்செலுத்தி கதிரியக்க ஆய்வு கூடம்) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 13908-க்கும் மேற்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாரடைப்பிற்கு உடனடியாக (ஒரு மணி நேரத்திற்குள்) செய்யும் சிகிச்சை 2171, இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் 3463 சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
இருதய துடிப்பு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு 75 நிரந்தர இருதய துடிப்பு கருவி, 248 தற்காலிக இருதய துடிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பிறவியிலேயே இருதய குறைபாடுள்ள குழந்தைகள் 4, பெரியவர்கள் 10 பேருக்கும் அறுவை சிகிச்சையின்றி இருதய உட்செலுத்தி சிகிச்சை முறை மூலம் காயில் வைத்து இருதய குறைபாட்டை சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மகுடம் சேர்க்கும் வகையில், கடந்த வாரம் தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த 43 வயது மிக்க ஆண், ஏற்கனவே இருதய பைபாஸ் சிகிச்சை செய்து இப்போது குறைவான இதய செயல்திறன் (இஎப்-25%) மற்றும் குறைவான இருதய துடிப்பு காரணமாக சிகிச்சைக்கு வந்தார்.
இவருக்கு இதய ஒத்திசைவு சிகிச்சை டிஃபிப்ரிலேட்டர் என்னும் சாதனம் கடந்த 4-ந்தேதி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு உடல்நலம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனையில் 10 முதல் 12 லட்சம் வரை செலவாகும்.

இச்சிகிச்சை இதுவரை தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது முறையாகவும் மற்றும் தஞ்சை பகுதியில் முதல் முறையாகவும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


