பைசன் காளமாடன் – திரைப்பார்வை
சாதியப் பிரிவு வன்முறை மற்றும் இரண்டு சமூக தலைமையிலான போட்டி குழுக்களுக்கு இடையேயான பழிவாங்கும் செயல்கள் ஆகியவற்றின் பின்னணியில் உருவான படைப்பு என்று முடிவுக்கு வந்து விட கூடாது.
தங்களது சமூக அந்தஸ்தைப் பாதுகாக்க ஒரு குழுவும், ஆதிக்கத்திற்கு அப்பால் உயர உத்வேகத்துடன் போராடும் இன்னொரு குழுவும், படம் முழுக்க அந்த இரு தரப்பினரின் உணர்வுகளை உண்மையானதாக உணர வைக்கிறது.
பசுபதி தனது மகன் கிட்டன் (துருவ் விக்ரம்) வன்முறையிலிருந்து விலகி இருக்க விரும்பும் அக்கறையுள்ள தந்தையாக ஜொலிக்கிறார். சூழ்நிலைகள் அவரை உள்ளே இழுக்கின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கபடி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்த கிட்டன் இந்த விரோத உலகத்திலிருந்து எப்படி உயர்ந்து வருகிறார் என்பது கதையின் மையம்.
கிரிக்கெட், கால்பந்து, கபடி என இன்னும் பிற விளையாட்டுகளை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்தாலும், கபடி விளையாட்டை படம் நெடுக காட்டி, நம் கால்கள் பரபரப்படைய செய்து, நம்மையும் களத்திற்குள் இழுத்து செல்வது போல் அமைக்கப்பட்ட காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.
பசுபதி தனது அற்புதமான நடிப்பால் நம் நெஞ்சத்தில் இடம் பிடிக்கிறார். துருவ் விக்ரம் தனது பாத்திரத்திற்கு சரியாக நேர்மையானவராக பொருந்துகிறார்.
கிட்டனின் காதலியாக நடிக்கும் அனுபமாவை விட அவரது அண்ணனாக நடித்தவரின் நடிப்பு அபாரம்.
நாயகனின் கபடி கனவை நனவாக்க பாடுபடும் உடற்பயிற்சி ஆசிரியர் அருவி மதனின் நடிப்பு அதைவிட அபாரம். நாயகனின் சகோதரி ரஜிஷா விஜயன் தோன்றும் காட்சிகள் அனைத்திலும் தனது இயல்பான நடிப்பால் நம் இதயத்திற்குள் எளிதாக அமர்ந்துவிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னாவின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. பல காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது.
இரு சமூகத்தின் தலைவர்கள் எதற்காக ஆயுதத்தை எடுத்தார்கள் என்பதையும் சமத்துவத்திற்கான நியாயத்தையும் அதன் பின்னணியிலான அரசியலையும் கச்சிதமாக முன்வைத்திருக்கிறார் இயக்குனர்.
அமீர், லால் இருவரும் மிகை நடிப்பு ஏதுமின்றி, தங்கள் தலைமைப்பொறுப்பை சரியாக செய்திருக்கின்றனர். விளிம்புநிலை சமூகங்களைப் பாதிக்கும் சிக்கலான பிரச்சினைகளை, பெரும்பாலும் கவனிக்கப்படாத செய்திகளை ஆராய்ந்து, தனக்கு வாய்த்த செல்லுலாய்ட் ஊடகம் வழியாக சொல்ல தவறாத இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த படத்திலும் சமூகப்பொறுப்புடன் தன் கடமையை சரியாக செய்திருக்கிறார்.
விலங்குகளை உருவகங்களாகப் பயன்படுத்தும் பாணி, இந்த படைப்பிலும் தொடர்கிறது. பரியேறும் பெருமாள் படத்தில் ஒரு நாயும், கர்ணன் படத்தில் ஒரு கழுதையும் குதிரையும் ஆழமான அர்த்தத்தைக் குறிப்பது போல, பைசன் விலங்கை ஒரு குறியீட்டு அங்கமாகப் பயன்படுத்தியது பொருத்தமாக இருக்கிறது. அறிவியல், நுண்ணறிவு தொழில்நுட்பம் முன்னேறிய இன்றைய காலக்கட்டத்திலும் கூட சாதிய ஒடுக்குமுறைகளும், ஆணவக் கொலைகளும் மலிந்து கிடக்கும் சூழலில் “பைசன் – காளமாடன்” போன்ற படங்கள் தேவை தான்.
பேருந்தில் செல்கிற போது ஒரு ஆடு சிறுநீர் கழித்தது என்பதற்காக, குருதி வெள்ளம் கொட்ட செய்கிற, குரூர எண்ணம் கொண்ட சமூகத்தில் நாம் இருந்திருக்கிறோம் என்பதும், இன்று எளிதாக கிடைக்கிற அனைத்தும் அவ்வளவு எளிதாக, எடுத்த எடுப்பில் கிடைத்ததில்லை. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் மிகப்பெரிய வலியும், வேதனையும் நிறைந்த வரலாறு ஒளிந்திருக்கிறது என்பதை உணர்த்தவும் இப்படியான வலிமிகுந்த கதை, இன்றைய இளைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் அவசியம் கடத்தப்பட வேண்டும். நெறியாள்கை, நடிப்பு, காட்சியமைப்பு, இசை என இன்னும் பிற திரைப்பட உருவாக்கத்திற்கான அனைத்து கூறுகளும் அதன் நோக்கமும் சரியான கலவையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் பைசன் திரைப்படம் மாரி செல்வராஜின் தனித்துவமான கதை சொல்லும் பாணியுடன் சந்தேகத்திற்கு இடமின்றி சிக்கலான சமூக அரசியலை
ஆராய்கிறது.
வேலிக்குள் அடைத்து வைக்க நினைக்கும் சமூகமும், அடைப்பட்ட வேலிக்குள் இருந்து வெளியே வர துடிக்கும் சமூகமும் ஒரு நாள், ஒரு புள்ளியில் இணக்கமாக சந்திப்பார்கள் என்கிற நேர்மறையான சிந்தனையை விதைத்து செல்கிறது இந்த படைப்பு.


