நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான அங்கூரம்
அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான அங்கூரம் (பிடிமண்) வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் வெளித்தெப்பக் கரையில் அமைந்துள்ள அங்கூர விநாயகர் முன்பிருந்து பிடிமண் எடுத்து தங்க பல்லக்கில் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித் திருவிழா வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான அங்கூரம் இன்றைய தினம் விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலையில் திருக்கோயில் நடைதிறந்ததும் முதலில் சாயரட்சை பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடா்ந்து நெல்லையப்பரின் பிரதிநிதியான அஸ்திரதேவர் தங்கப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வெளி தெப்பக்குளம் அருகே உள்ள அங்கூர விநாயகர் கோவில் வந்தடைந்தார்.
அங்கு அங்கூர விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அங்கூரப் பிடிமண் எடுக்கப்பட்டது பின்னர் தங்க பல்லக்கில் வைத்து மேளதாளங்களுடன் திருக்கோவில் யாகசாலைக்கு அங்கூரபிடிமண் கொண்டுவரப்பட்டு பாலிகை ஸ்தாபனம் நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு திருகாப்பு கட்டும் நிகழ்ச்சியும் மகா தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.