குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி விசு திருவிழா
குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று துவங்கியது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிக்கரை அருகில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் ஐப்பசி விசு திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
இதே போன்று இந்த ஆண்டிற்கான ஐப்பசி விசு திருவிழா இன்று காலை காசி விஸ்வநாதர் சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
இதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், கும்பநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டது.
ஐப்பசி விசுத் திருவிழா கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
ஐப்பசி விசுத் திருவிழாவில் தினமும் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும், காலை மாலை நேரங்களில் கோவிலில் இருந்து சுவாமி அம்பாள் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழாவில் வருகிற 15ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் கோவிலில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகளும் தாண்டவ தீபாராதனைகள் நடைபெறுகிறது.
திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில் ஐப்பசி விசுத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.


