நாம் ஏன் அரசியலுக்கு செல்ல வேண்டும் என மதுரையில் நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி
உயிரைக் கொடுத்து முழு நேரமாக செயல்படும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது நாம் ஏன் அரசியலுக்கு செல்ல வேண்டும் என மதுரையில் நடிகர் விஜய் ஆண்டனி பேட்டி.
நடிகர், இசை அமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனி நடிப்பில் 25 ஆவது திரைப்படமான சக்தித் திருமகன் எனும் திரைப்படம் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது, இந்நிலையில் மதுரை பரவையில் உள்ள மங்கையர்கரசி பெண்கள் கலைக் கல்லூரியில் விஜய் ஆண்டனி படக்குழுவினருடன் மாணவிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி கூறுகையில் “சக்தி திருமகன் என்னுடைய 25 ஆவது படம், 25 படங்கள் நடிப்போம் என எதிர்பார்க்கவே இல்லை, விளையாட்டாக படத்தில் நடிக்க ஆரம்பித்தேன், முழு நேர நடிகராக இருக்கும் தகுதி எனக்கு இல்லை, அதை நான் ஒற்றுக்கொள்கிறேன்.
கமல், சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் முழு நேர நடிகராக செயல்படும் போது நான் முழு நேர நடிகராக செயல்படவில்லை, சினிமாவில் பிச்சைக்காரன் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயங்குவதில்லை, நடிகன் என நம்பி நடிப்பதை விட கதை நம்பி நடித்து வருகிறேன், பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நிறைய நடிகர்கள் நடிக்க தயங்கிய பொழுது அந்த கதாபாத்திரத்தில் தான் எனக்கு ஒரு ஹீரோ தெரிந்தார்.
நான் ஆவரேஜ் நடிகராக இருப்பதால் நிறைய புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்க முடிகிறது, நான் தயாரித்த படங்களில் 90 சதவீதம் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துள்ளேன், அருவி படத்தின் தீவிரமான ரசிகன் நான், அருண் பிரபு உடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதுமுக இயக்குனர்களை ஊக்குவிப்பதற்காக நான் நடிகனாக மாறிவிட்டேன், முதல்வன், ஜென்டில்மேன் போன்ற அரசியல் பட வரிசையில் சக்தி திருமகன் அரசியல் கலைக்களத்தை தாங்கி எடுக்கப்பட்டுள்ளது.
இளையராஜா தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம், இசையமைப்பாளர்களும் கஷ்டப்பட்டு தான் சினிமாவிற்கு வந்துள்ளனர், இளையராஜா இசையில் உள்ள ஆத்மா வேறு யாரிடமும் நான் அறிந்ததில்லை, பண்ணைபுரத்திலிருந்து ஹார்மோனியத்தை கையில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
நான் ஒரு படத்தை இசையமைக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்வேன், ஆனால் இளையராஜா ஒரே நாளில் படத்திற்கான இசையை அமைத்து விடுவார், 50 படங்களுக்கு மேல் நான் இசை அமைத்துள்ளேன், என்னை விட பத்தாயிரம் மடங்கு உயர்ந்த இசையமைப்பாளராக இளையராஜா உள்ளார், இளையராஜா மூளையை மட்டும் பாதுகாக்க புதுவிதமான தொழில்நுட்பம் வந்தால் அதை பயன்படுத்தி இளையராஜா மூளையை தமிழகத்தில் பாதுகாக்க வேண்டும், தமிழக முதலமைச்சர் இளையராஜா பெயரில் விருதை அறிவித்தது சந்தோஷமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.

அரசியல் புரோக்கர் ஒரே நாளில் இந்தியாவை திரும்பி பார்க்க வைப்பது தான் சக்தி திருமகன் படத்தின் கதை, எல்லா பிரச்சனைகளுக்கும் அரசியல்வாதிகளே காரணம் காட்டி பழகிவிட்டோம், சொசைட்டி என்பது நாம் தான், ஜாதி, மத பிரிவினைகளுக்கு கலை காரணம் என்பதை இப்படம் காண்பிக்கிறது, நான் நினைத்தால் அரசியலுக்குள் வந்துவிடலாம் ஆனால் எனக்கு அரசியலுக்கு வருவதற்கு ஈடுபாடு இல்லை, அரசியலுக்குள் வந்துள்ள நடிகர்களை குறித்து கருத்து சொல்வது என் வேலையில்லை.
நான் சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்னை நம்பி பல பேர் என்னோடு பணியாற்றி வருகின்றனர், உயிரைக் கொடுத்து முழு நேரமாக செயல்படும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது நாம் ஏன் அரசியலுக்கு செல்ல வேண்டும், அரசியலுக்கு வந்துள்ள அனைவருக்கும் என்னுடைய ஆதரவுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.


