ஓட்டுநர் உரிமத்தை கேட்டு வந்த தற்காலிக ஊழியர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் உரிமத்தை கேட்டு வந்த தற்காலிக ஊழியரை திமுக நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் தாக்கியதாக கூறி பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளையில் கடந்த மூன்று மாதங்களாக ராயகிரியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கார்த்திக் ராஜா பணியில் சேரும்போது நடத்துனர் உரிமமும் ஓட்டுனர் உரிமமும் நிர்வாகத்திடம் வழங்கியதாகவும் இவர் நடத்துனராகவும் ஓட்டுனராகவும் பணியாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கார்த்திக் ராஜா கடந்த எட்டாம் தேதி அன்று திருச்செந்தூர் வழித்தடத்தில் இயங்கக்கூடிய அரசு பேருந்தை இயக்கியதாகவும், அந்த பேருந்து நெல்லையருகே பழுதாகி நின்றதால் அதனை நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கொண்டு நிறுத்தியதாகவும், இதன் காரணமாக கார்த்திக் ராஜாவை கிளை மேலாளர் மற்றும் பணிமனை திமுக நிர்வாகிகள் அவதூறான வார்த்தைகளால் பேசியதாகவும், தொடர்ந்து தற்காலிக பணியில் இருந்து பணிநீக்கம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து கார்த்திக் ராஜா தற்காலிக பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், பணிமனை கிளை மேலாளர் உத்தரவின் பெயரில் கார்த்திக் ராஜாவின் நடத்துனர் உரிமத்தை மட்டும் அவரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னுடைய ஓட்டுனர் உரிமத்தையும் தருமாறு கார்த்திக் ராஜா கூறியுள்ளார்.
ஓட்டுநர் உரிமத்தை மறுநாள் வாங்கிச் செல்லுமாறு பணிமனம் பணிமனை நிர்வாகம் கூறியதாகவும், பின்பு ஓட்டுனர் உரிமம் தவறிவிட்டதாகவும் தங்களிடம் இல்லை எனவும் நிர்வாகம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மது போதையில் இருந்த கார்த்திக் ராஜா, பணிமனைக்குச் சென்று தன்னுடைய ஓட்டுனர் உரிமத்தை தருமாறு கேட்டு அங்கிருந்த பணிமனை திமுக தலைவர் குருசாமி ராஜாவிடமும் செயலாளர் சங்கர் ராஜாவிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே திமுக நிர்வாகிகளான குருசாமி ராஜாவும், சங்கர் ராஜாவும் பணிமனை ஊழியர் ஒருவரும் கார்த்திக் ராஜாவை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் ராஜா இன்று தன்னுடைய ஓட்டுனர் உரிமத்தை கேட்டு பணிமனை வாதில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் திடீர் பரபரப்பு நிலவியது.
மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் ராஜா கூறுகையில் சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளையில் பேருந்துகள் அனைத்தும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், பெரும்பாலான பேருந்துகளில் பிரேக்கிங் சிஸ்டம் வேலை செய்வதில்லை என்றும் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்த அவர்,
கிளை மேலாளராக இருக்கக்கூடியவர் எப்போதும் மது போதையில் இருப்பதாகவும் அவரே மது போதையில் இருந்து விட்டு தன்னை மது குடிக்க கூடாது என அறிவுரை கூறுவதாகவும் தெரிவித்த கார்த்திக் ராஜா தன் மீது நடவடிக்கை எடுத்தது போல் கிளை மேலாளர் மற்றும் தன்னை தாக்கிய திமுக நிர்வாகிகள் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தியிடம் இது குறித்து கேட்டபோது அவர் கார்த்திக் ராஜா நடத்துனர் தான், அவர் பேருந்து ஓட்டுனர் இல்லை என்றும் அரசு பேருந்தை அவர் இயக்கியதே இல்லை என்றும் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவிற்கு ஒரு முரணான தகவலை தெரிவித்தார்.
அதேபோன்று சங்கரன்கோவில் பணிமனை கிளை மேலாளர் குமாரிடம் கேட்டபோதும் அவரும் கார்த்திக் ராஜா நடத்துனர் தான் ஓட்டுனர் அல்ல நடத்துனர் உரிமத்தை அவரிடம் வழங்கி விட்டதாக முரணான பதிலை தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிமம் இன்றி ஒருவரால் எப்படி அரசு பேருந்தை இயக்கியிருக்க முடியும் என்றும், ஓட்டுனர் உரிமத்தை ஒருவரிடம் வாங்காமல் அவருக்கு எப்படி அரசு பேருந்தை இயக்குவதற்கு கிளை மேலாளரும் மற்ற நிர்வாகிகளும் அனுமதி அளித்தார்கள் என்ற கேள்வியும், பயணிகள் மற்றும் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.