சிதம்பரம் நகரில் ரூ. 29 கோடி மதிப்பீட்டில் தில்லையம்மன் ஓடை கரை வழியாக இணைப்புச் சாலை. கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அடிக்கல் நாட்டினார்
சிதம்பரம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிதம்பரம் நகரில் உள்ள தில்லை அம்மன் ஓடை வழியாக இணைப்புச்சாலை அமைக்கப்படும்.
என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சுமார் ரூ. 29 கோடி மதிப்பீட்டில் 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்புச் சாலை அமைக்கும் பணி இன்று துவங்கியது.
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிதம்பரம் நகரில் உள்ள தில்லையம்மன் ஓடை அருகில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்து இந்த பணிகளை துவங்கி வைத்தார்.
19 மிக சிறு பாலங்கள், 2 சிறு பாலங்கள் என சுமார் 2 கிலோ மீட்டர் 400 மீட்டர் தூரத்திற்கு இந்த இணைப்புச்சாலை அமைய உள்ளது.
இந்த சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால், சிதம்பரம் நகருக்குள் செல்லாமல் இணைப்புச்சாலை வழியாக சென்று சிதம்பரம் பஸ் நிலையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை போன்ற இடங்களுக்கு எளிதில் செல்ல முடியும்.


