தேர்தல் நடைமுறையால் செஞ்சி வார சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் பாரம்பரிய ஆட்டு சந்தை, இம்முறை தேர்தல் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். செஞ்சியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடு மாடு, கோழி மற்றும் காய்கறிகளை விவசாயிகள் செஞ்சி வாரச் சந்தைக்கு விற்பணைக்கு கொண்டு வருவது வழக்கம்.
ஆண்டுதோறும் ரம்ஜான் காலத்தில் இச்சந்தையில் ரூ.5 கோடி முதல் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் நிலையில், இவ்வாண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வியாபாரம் கடுமையாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, தேர்தல் விதிமுறைகளின் படி ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால், வியாபாரிகள் மற்றும் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் விளைவாக, வழக்கமாக அதிக விலைக்கு ஏலம் போகும் ஆடுகள் கூட இம்முறை ரூ.1 கோடி அளவிலான மொத்த வர்த்தகத்தைக் கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக பலர் சந்தைக்கு வரத் தயங்கியதுடன், வந்தவர்களும் அதிக அளவில் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் செஞ்சி பகுதியை சுற்றி காடுகள் மற்றும் மலைகள் சூழ்ந்துள்ளதால் அங்கு வளா்க்கப்படும் ஆடுகள் இயற்கையாக வளரும் தாவரங்களை உட்கொள்வதால் ஆடுகளின் கறி சுவையாக இருக்கும் என்கின்றனா்.
எனவே செஞ்சி பகுதியில் வளரும் வெள்ளாடுகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.
வியாபாரிகள் கூறுகையில், “ரம்ஜான் சந்தை எங்களுக்கான முக்கிய வருமான வாய்ப்பு. ஆனால் இந்த ஆண்டு தேர்தல் விதிமுறைகள் காரணமாக வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடுகள் இல்லாததால் நாங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதனால், ரம்ஜான் கால ஆட்டு சந்தையை நம்பி வாழும் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


