விஜய்யின் தேர்தல் வியூகம்: 50 வேட்பாளர்களுடன் நேரடி சந்திப்பு – தொகுதிகளுக்கான மாஸ்டர் பிளான் தயார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காகத் தனது கட்சி நிர்வாகிகளுடன் முதற்கட்ட வேட்பாளர் நேர்காணலை நடத்தி, அவர்களுக்குத் தொகுதிப் பணிகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் முதற்கட்டமாக சுமார் 50 வேட்பாளர் ஆர்வலர்களுடன் அவர் நேர்காணல் நடத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் னார்.
இந்தக் கூட்டத்தில் நீண்டகாலமாக விஜய்யுடன் பயணித்த மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
குறிப்பாக.‘ஈசிஆர்’ சரவணன் (சோழிங்கநல்லூர்), அன்பன் கல்லணை (மதுரை மேற்கு), பார்த்திபன் (சேலம் தெற்கு) மற்றும் புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் முகமது பர்வீஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்இவர்களுடன் அரசியலுக்குப் புதியவர்களான 40 முதல் 50 வயதுக்குட்பட்ட சில நபர்களையும் விஜய் சந்தித்துப் பேசினார்.
நேர்காணலின் போது, தான் மக்கள் சேவைக்காகவே திரையுலகை விட்டு விலகி அரசியலுக்கு வந்ததை விஜய் தெளிவுபடுத்தினார். வேட்பாளர் ஆர்வலர்களை ஐந்து ஐந்து நபர்களாகச் சந்தித்து உரையாடிய விஜய், அனைவரும் விரைவில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெறத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“அரசியல் பயணத்தில் சவால்கள் வரலாம், ஆனால் அவற்றை நாம் அனைவரும் இணைந்து எதிர்கொள்வோம்” என்று ஊக்கமளித்த அவர், தத்தமது தொகுதிகளில் நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளைத் தொடங்கவும் அறிவுறுத்தினார்.
கூட்டம் முடிந்ததும், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக பை வழங்கப்பட்டது. அதில் அவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதியின் நிலவரம், வாக்காளர் புள்ளிவிவரங்கள், பூத் கமிட்டி விவரங்கள் மற்றும் அடுத்த 30 நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கையேடு மற்றும் பென் டிரைவ் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
முன்னதாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் மற்றும் அருண் ராஜ் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இவர்கள் முறையே கோபிசெட்டிபாளையம், வில்லிவாக்கம், தியாகராய நகர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள வேட்பாளர் ஆர்வலர்களுக்கான நேர்காணல் வரும் நாட்களில் பனையூரில் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


