பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி நகர மக்களின் பிரதானமாக கோயிலாக வழிபடப்படுவது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகும். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் முக்கிய உபகோயிலான இக்கோயிலில் மாசித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழா இன்று முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. இரவு 7மணிக்கு மேல் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு உட்பிரகாரம் வலம் வர செய்யப்பட்டது. இரவு 8:40 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில் நடப்பட்ட முகூர்த்தக்கம்பத்துக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

வரும் பிப் 10ம் தேதி கம்பம் சாட்டுதலும் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் பிப்.17 ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
கொடியேற்றம் துவங்கியது முதல் 10 நாட்களுக்கும் அருள்மிகு மாரியம்மன் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், சிம்மவாகனம், தங்கக்குதிரை, வெள்ளியானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு இரதவீதி உலா எழுந்தருள்கிறார். பிப்24ம் தேதி இரவு 7 மணி அளவில் திருக்கல்யாணமும், பிப்25.ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலும் நடைபெறுகிறது.
தேரோட்டத்தை தொடர்ந்து அம்மன் வண்டிக்கால் பார்த்தல், வானவேடிக்கை நடைபெறவுள்ளது.


