திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்
கொட்டு மழையை பொருட்படுத்தாமல் மாவட்ட திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பொங்கல் வைத்து மாட்டு வண்டியில் மாவட்ட ஆட்சியரை அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்து சிறப்பித்த அரசு அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் இன்று பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் வாழைமரம் மற்றும் கரும்பு தோரணங்கள் கட்டி வண்ணக் கோலங்கள் போடப்பட்டு பொங்கல் விழா கோலாகலமாக துவங்கியது.
பொங்கல் விழாவின் முதல் நிகழ்வாக பொங்கல் வைக்கும் நிகழ்வு துவங்கிய நிலையில் அதிகாலை முதலே திண்டுக்கல் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடை மற்றும் பிளாஸ்டிக் கவர் உதவியுடன் அரசு அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களை அதிகாரிகள் மாட்டு வண்டி மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் சரவணன் குடும்பத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
50 அரசுத் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
துறை ரீதியாக தனித்தனியாக பொங்கல் வைக்கப்பட்டது. கிராமிய கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கிராமிய கச்சேரி, சிலம்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளோடு பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பெண்கள் உட்பட அரசு அதிகாரிகள் அனைவரும் தாரை தப்பட்டை முழங்க கொட்டும் மழையில் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி பொங்கல் விழாவினை கொண்டாடினர்.

