சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
தீபாவளிக்கு இன்னும் இரண்டு தினங்கள் உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பட்டாசுகளை வாங்க உள்ளூர் வெளியூர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
மேலும் 2000-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகளில் கடந்த ஆடி 18ம் பெருக்கு நாளில் பட்டாசு விலை பட்டியல் வெளியிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பட்டாசு விற்பனையை விற்பனையாளர்கள் தொடங்கினர்.
வெளி மாநிலங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்ட பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜை பின்னர் சிவகாசியில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனை கடைகளில் பட்டாசுகளை வாங்க தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் தீபாவளிக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதாலும் இன்று பட்டாசுகளை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கடந்த ஆண்டை விட சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு உகந்த குறைமட்ட புகை மற்றும் ஒலி எழுப்பும் பட்டாசுகளுக்கே அதிக வரவேற்பு உள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள்
தகவல் தெரிவிக்கின்றனர்.
சிவகாசி மாநகர் முழுவதும் மக்கள் கூட்டம் காணப்பட்டதால், போக்குவரத்து போலீஸார் வாகன நெரிசலை தவிர்க்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


