in

புதுச்சேரி..நள்ளிரவில் பல்கலை மாணவர்கள் மீது தடியடி

புதுச்சேரி..நள்ளிரவில் பல்கலை மாணவர்கள் மீது தடியடி

பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லை கொடுக்கும் பேராசிரியர்கள்..நடவடிக்கை எடுக்க கோரி நள்ளிரவு வரை மாணவர்கள் போராட்டம்…போலீசார் தடியடி நடத்தி மாணவ பிரதிநிதிகளை கைது..
காரைக்காலை தொடர்ந்து புதுச்சேரியில் வலுக்கும் பாலியல் விவகாரம்…

காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டியும், பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை நள்ளிரவு வரை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பயின்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவி அழுதபடியே பேசும் ஆடியோ இணையத்தில் வைரலானது.

அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் அடிக்கடி ஆபாசமாகப் பேசுவதாகவும், வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்களை அனுப்ப சொல்வதாகவும்,நிர்வாண புகைப்படங்களை அனுப்பாவிட்டால் இன்டெர்னல் மதிப்பெண்களை வழங்கமாட்டேன் என மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்திருந்தார். மேலும் பெற்றோருக்குத் தெரிந்தால் படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் உள்ளதாகவும், கேரள மாணவிகளை குறிவைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் மாணவி அழுதபடி பேசிய ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் இது தொடர்பாகக் காரைக்காலை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் ஆடியோ ஆதாராங்களுடன், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதேபோல் காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழத்திலும், பேராசிரியர் ஒருவர் ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவி ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது‌. இப்படி பல்கலைக்கழகத்தில் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக்கால் வளாக தலைவர் மாதவைய்யா மீதும், மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், பல்கலைக்கழக மானிய குழு 2015 விதிகள் படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கையில் கண்டன பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து‌ மாலை தொடங்கிய‌ மாணவர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்து வருவதால், வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது..பேராசிரியரின் பாலியல் தொல்லைக்கு எதிரான போராட்டம் காரைக்காலைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் போலீசார் அங்கு வந்து தடியடி நடத்தீ மாணவப் பிரதிநிதிகள் 18 பேரை கைது செய்தனர். அவர்களை வலுகட்டாயமாக அடித்து இழுத்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து வேனை மறித்து மற்ற மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.. இந்த நிலையில் போலீசார் மற்றும் பல்கலைக்கழக பாதுகாவலர்கள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் இன்றும் தொடர்கின்றனர்.

What do you think?

கோயம்பேட்டில் திருநங்கையுடன் ஏற்பட்ட தகராறில் காதலன் விபரீதம்

தடையை மீறி தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு…டிராக்டருடன் மடக்கி பிடித்த போலீசார்..