ரூ.16 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்க பந்தகால் நடும் பணி
புகழ்பெற்ற நாகப்பட்டினம் சௌந்திரராஜபெருமாள் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.16 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்க பந்தகால் நடும் பணி நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாடல்பெற்ற வைணவ, சைவ தலங்கள் நிறைய உள்ளது. இதில் நாகப்பட்டினம் சௌந்திரராஜபெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும். திருமங்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலம் ஆகும். இந்த கோயிலில் மட்டும் தான் நின்ற, அமர்ந்த, கிடந்த கோலங்களில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும். நான்கு யுகங்களிலும் வழிப்பட்ட தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலம்.
ஆதிசேஷன் வழிபட்டதால் தான் இந்த ஊர் நாகன்பட்டினம் என்றாகி பின்னர் நாகப்பட்டினம் என அழைக்கப்பட்டது என வரலாறு கூறுகிறது. திராதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த தலம்.
துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த தலம். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற நாகப்பட்டினம் சௌந்திரராஜபெருமாள் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதிலும் புராட்டாசி மாதங்களில் சௌந்திரராஜபெருமாள் கோயிலில் கூட்டம் அதிமாக காணப்படும். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதால் நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய நிழற்குடை அமைக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது.

இதையடுத்து நிழற்குடை அமைப்பதற்காக இரும்பிலான அடிக்கல் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் அடிக்கல் நாட்டினார். கவுன்சிலர் சத்தியவாணிகணேசன் மற்றும் பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.


