அத்தி மரத்திலான 32 அடி உயர விஸ்வரூப வினாயகர் ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாகையில் நடைபெற்ற அத்தி மரத்திலான 32 அடி உயர விஸ்வரூப வினாயகர் ஊர்வலம்: மேளதாளங்கள் முழங்க மக்கள் ஆடிப்பாடி உற்சாகம்: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடி அத்தி விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் அதி விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 38வது ஆண்டாக 16 டன் எடையில் அத்தி மரத்திலான 32 அடி பிரம்மாண்ட அத்தி விநாயகரின் ஊர்வலம் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற நாகை நீலாதாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் 10 க்கும் மேற்பட்ட வண்ணமயமான மின் அலங்கார விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாகவலம் வந்தன.
தப்பாட்டம், பொய்கால் குதிரை மற்றும், கேரளாகதகளி கலைஞர்களின் ஆட்டத்துடன் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பாடி விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடினர்.
விஸ்வரூப விநாயகர் ஊர்வலத்தில், வழிநெடுகிலும் நின்றிருந்த மக்கள் பிரமாண்டமான அத்தி விநாயகர் சிலைக்கு பூஜை செய்தும், ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைத்தும் விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை படைத்தும் வேண்டிக்கொண்டனர்.

நாகையிலிருந்து நாகூர் வரை 10 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட அத்தி விநாயகர் கீழ் வைக்கப்பட்டிருந்த பிரதிஸ்டை விநாயகர் சிலையினை நாகூர் வெட்டாற்றில் பக்தர்கள் இன்று (28) அதிகாலை கரைத்தனர்.
விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


