புதுச்சேரி பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமரை இழிவுபடுத்தி பேசிய வைரமுத்துவை கண்டித்து புதுச்சேரி பாஜக மகளிர் அணி சார்பில் இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது வைரமுத்துவின் படத்தை கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் ராமரைப் பற்றி இழிவு படுத்தியும், அவதூராகம் பேசிய கவிஞர் வைரமுத்துவை கண்டித்து புதுச்சேரி மாநில பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திராகாந்தி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் மற்றும் பாஜகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராமரை பற்றி இழிவாகவும், அவதூராகவும் பேசிய வைரமுத்துவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது திடீரென அவர்கள் தாங்கள் வைத்திருந்த வைரமுத்துவின் திருவுருவப்படத்தை கிழித்து எறிந்தும், தீயிட்டு கொளுத்தியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வைரமுத்துவின் திருவுருவப்படங்களை பிடுங்கி சென்றனர்.


