தென்காசி அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்தமிழகத்தின் சைவ, வைணவ ஒற்றுமையை உலகிற்கு உணா்த்தும் திருத்தலமான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில்.
இங்கு சிவனும் பெருமாளும் சோ்ந்த கோலத்தில் சங்கரநாராயணா் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகின்றாா். இங்கு சங்கரநாராயணருக்கும் கோமதி அம்பாளுக்கும் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுகின்றன. அதில் ஆடிமாதம் கோமதி அம்பாளுக்கு நடைபெறும் ஆடித்தபசு திருவிழா புகழ்பெற்றது.
12 தினங்கள் நடைபெறும் இத் திருவிழாவில் 11ம் நாள் அம்பாள் சிவனை அடைய வேண்டி தவம் இருக்க, சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிாிப்பது தவறு என்று உணர்த்தும் வகையில் சுவாமி கோமதிஅம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், பின்னா் தன் சொருபத்துடன் சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி தருகின்றாா்.
இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடக்கமாக அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
கொடிமரம் அருகில் நவகலசங்கள் கொண்டு பூஜைகள் நடத்தப்பட்டது. ஸ்ரீ கோமதி அம்பாள் சிவிகை பல்லக்கில் கொடிமரம் அருகில் ஏழுந்தருளினாா். கொடிப்பட்டம் வீதிஉலாவந்ததும் கொடிபட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்றது. அம்பாள் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் காலை 04.35 மணிக்கு மேல் காலை 05.05 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவாமூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி கோபுர ஆரத்தி சோடச உபசாரனைகள் நடைபெற்றது.
இன்றிலிருந்து திருவிழாவில் தினமும் காலை மற்றும் இரவில் கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். வருகின்ற 5ம் தேதி திருத்தேரோட்டமும் 07ம் தேதி ஆடித்தபசு திருவிழாவும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினா், திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனர்.


