தரிசு நிலங்களாக காணப்படும் விளைநிலங்கள்
நாகை அருகே ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த பாசன வடிகால் வாய்க்காலை திடீரென அடைத்ததால் 2 ஆண்டுகளாக 500 ஏக்கர் சம்பா குருவை சாகுபடி செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக காணப்படும் விளைநிலங்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள தொழுதூர் பாசன வடிகால் வாய்க்கால் வழியாக ஆண்டாண்டு காலமாக சுமார் 500 ஏக்கரில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சம்பா மற்றும் குறுவை சாகுபடி செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவர் திடீரென பாசன வடிகால் வாய்க்காலை அடைத்ததால் அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட விளை நிலங்கள் சாகுபடி செய்ய முடியாமல் வயல்களுக்கு தண்ணீர் வைக்க முடியாமலும் மழை வெள்ள காலங்களில் வடியவைக்க முடியாமலும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனால் சுமார் இரண்டு ஆண்டு காலமாக சாகுபடி செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த வடிகால் வாய்க்காலை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


