கணக்கில் வராத 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்.
செஞ்சி அடுத்த வளத்தி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை-கணக்கில் வராத 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வளத்தி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அழகேசன் தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலையிலிருந்து அலுவலகம் எதிரில் கண்காணித்து வந்த நிலையில்,

திடீரென மாலை 6 மணி அளவில் வளத்தி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார் பதிவாளர் முருகன், அலுவலக ஊழியர்களான கார்த்திகேயன், சாமுண்டீஸ்வரி, வித்யா, பத்திர எழுத்தர் பரதன் மற்றும் இடைத்தரகர் மணிரத்தினம் ஆகியோரிடம் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக ஆறு பேருக்கும் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் வளத்தி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


