அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பெருவிழா. 360 டிகிரி கோணத்தில் வட்டமடித்த பறவை காவடி எடுத்த நபர்.
கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பெருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் அருள்மிகு சின்ன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி பெருவிழாவானது கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இதனை தொடர்ந்து சின்ன மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தினந்தோறும் பூஜைகள் செய்யப்பட்டன.
மேலும் இரவு நேரத்தில் சின்ன மாரியம்மன் மின் அலங்கார தேர்பவனியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வருகை புரிந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

இந்த ஊர்வலமானது டிப்போ காளியம்மன் கோவிலில் இருந்து துவங்கி ஏரிச்சாலை, 7ரோடு சந்திப்பு, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. மேலும் இவ்விழாவில் காந்தாரா திரைப்படத்தில் வரும் கடவுள் போலவும் வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேலும் 360 டிகிரி கோணத்திலும் பறவை காவடி சுற்றுவது போல் வடிவமைக்கப்பட்டு, பறவை காவடி எடுத்த நபரை முக்கிய சந்திப்புகளில் 360 டிகிரி கோணத்தில் வட்டமடிக்க செய்தது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் சின்ன மாரியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் இந்த திருவிழாவில் கொடைக்கானல் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


