மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் படையலிட்டு மலர்தூவியும், தானியங்கள் தூவியும் வரவேற்கப்பட்டது.
மேட்டூரில் இருந்து கடந்த 12 ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் சீர்காழி அருகே மேலையூர் காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது. பொதுபணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்தூவி வணங்கி வரவேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பல்லாயிரம் மையில்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் உள்ள இந்த கடைசி கதவணை வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும்.
ஒவ்வொரு வருடமும் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இந்த கடைசி கதவணையை வந்தடையும். அவ்வாறு இந்த ஆண்டு மேட்டூரில் கடந்த 12 ஆம் தேதி, முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் இன்று காவிரியின் கடைசி கதவணையை வந்தடைந்தது.

காவிரி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் படையலிட்டு மலர்தூவியும், தானியங்கள் தூவி வணங்கி வரவேற்றனர். இக்கதவணையில் தண்ணீர் தேக்கி வைத்து ஓவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும், மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் 3057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2020 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.


