திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை
குழந்தை வரம் வேண்டி கழு மரத்திலிருந்து தூக்கி வீசப்படும் சாக்லேட் வாழைப்பழங்களை போட்டி போட்டு பிடித்த பொதுமக்கள், குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி கழுமரத்தில் சுற்றி வந்து வினோத வழிபாடு, திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாலங்காட்டில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மகா மாரியம்மன் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மகா மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது தொடர்ந்து காத்தவராயன் சுவாமி வீதி உலா வந்தார்.
ஆலயம் அருகில் அமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர கழுமரத்தில் காத்தவராயன் கதை வாசிக்கப்பட்டு ஆரியமாலா காத்தவராயன் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து கழு மரத்தின் மீது ஏறிய காத்தவராயன் வேடமிட்ட நபர் மேலிருந்து பக்தர்கள் மீது வாழைப்பழங்கள் சாக்லேட்டுகளை வீசி எறிந்தார், இவற்றை பக்தர்கள் போட்டி போட்டு பிடித்தனர்.
இவற்றை குழந்தை இல்லாதவர்கள் பிடித்தால் குழந்தை செல்வம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

மேலும் கழு மரத்தில் அமர்ந்த நபரிடம் குழந்தைகளை கொடுத்து சுற்றிவர செய்தனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும் என்பது அப்பகுதி பொதுமக்கள் நம்பிக்கையாகும்.
வினோதமான வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக திருவாவடுதுறை ஆதின மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்து ஆலயத்தில் அன்னதானம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.


