தஞ்சையில் 15,000 கிலோ போலி உரங்கள் பறிமுதல்
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் நேரடியாக விளைநிலங்களுக்கு சென்று உரம் விற்பனை செய்யப்படுவதாக வேளாண்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் கடந்த 20ஆம் தேதி வாகன சோதனையில் வேளாண் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த போது அதில் டிஏபி உரம் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதனை சோதனை செய்தபோது அது போலியான உரங்கள் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சரக்கு வாகனத்திலிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது தஞ்சையில் இருந்து அந்த உரங்கள் எடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதனையடுத்து தஞ்சை வடக்கு வாசல் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உரங்களை ஆய்விற்கு உட்படுத்தி குடோனுக்கு சீல் வைத்தனர். சோதனையில் அவை அனைத்தும் போலி உரம் என்பது தெரியவந்ததை அடுத்து இன்று காவல்துறை உதவியுடன் சீலை உடைத்து குடோனில் இருந்த 15,000 கிலோ உரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த உரங்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது – எங்கெங்கு விற்பனை செய்யப்படுகிறது? இதில் யார் யாருக்கு தொடர்பு இருப்பது என்பது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


