20 இரட்டை மாட்டு வண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்கள் கொண்டுவந்து ஊர்மெச்ச காதணி விழா
இரட்டை மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றி சீர்வரிசையாக தந்த தாய் மாமனை வாழ்த்திய குழந்தைச் செல்வங்கள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமம் உள்ளது. கிராமத்தில் பூ விவசாய குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார் – மாலியபுரம் தம்பதியினருக்கு அஸ்வினி மற்றும் தாமோதரன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தாய் மாலியபுரம் இவரின் உடன் பிறந்த சகோதரர் வேல்முருகன், தனது சகோதரி பிள்ளைகளுக்கு காதணி விழா செய்வதற்காக 200க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களுடன், E.காமாட்சிபுரத்திலிருந்து E.கொங்கப்பட்டி கிராமத்திற்கு 4 கிலோமீட்டர் தூரம் 20-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர் செனத்தியுடன் ஊர்மெச்ச காதணி விழா நடத்தியுள்ளார்.
இருசக்கர வாகனத்தை இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி தனது அக்காள் கணவருக்கு அன்பளிப்பாகவும் கொடுத்துள்ளார். மேலும் இரட்டை சீர் என்று சொல்லக்கூடிய பித்தளை பானை, அண்டா, பித்தளை குடங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் இரட்டை எண்ணிக்கையில் சீராக கொடுத்துள்ளார்.
மேலும் உப்பு, மிளகாய், மஞ்சள் பொடி, இரட்டை மாலை, இனிப்பு, கார வகைகள் என அனைத்தும் பாரம்பரியம் மாறாமல் தனதுச அக்காள் பிள்ளைகளுக்கு சீர்வரிசையாக கொண்டு வந்து கிராமத்தில் ஊர்மெச்ச காதணி விழாவை நடத்தியுள்ளார் வேல்முருகன்.

தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் அதே பழமையுடன் மறைந்து போன கலைகளை மீண்டும் கிராமத்தில் இருந்து எடுத்து வைக்கும் வண்ணமாக தாரை தப்பட்டை வாண வேடிக்கை சகிதம் ஆட்டுக்கிடாய், வெள்ளி பாத்திரங்களுடன் இந்த காதணி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார் வேல்முருகன்.
இத்தனை சீர் வரிசைகளையும் செய்து மனநிறைவை அடையாத வேல்முருகன் பெண் குழந்தையான அஸ்வினிக்கு 5 பவுனில் தோடு அணிவித்துள்ளார்.
எத்திலோடு காமாட்சிபுரம் கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரம் 20க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் சீர் செனத்தி கொண்டுவந்து தனது அக்கா பிள்ளைகளுக்கு சீர்வரிசை கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளார்.
வேல்முருகனின் இந்த செயல் கிராமத்தினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. காதணி விழா நிறைவாக சம்பிரதாயப்படி அசைவ விருந்து வழங்கப்பட்டு மொய் வாங்கப்பட்டு காதணிவிழா நடைபெற்றது.
இக்காதணி விழாவிற்கு சொந்த பந்தங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

