திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயத் திருக்குளத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அமாவாசை நாட்களில் ஆடி மாதம் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இந்த நாட்களில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து ஆறு, குளங்கள், கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் ஏரளாமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் இன்று நாள் முழுவதும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்கினர். கமலாலய குளத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்கள் குளத்தில் புனித நீராடி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
