தஞ்சாவூரில் 16 பெருமாள் (கிருஷ்ணர் ) நவநீத சேவை (வெண்ணெய்தாழி உற்சவம்) வெகு விமரிசையாக நடைபெற்றது, ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில்களில் 16 நவநீத சேவை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை புறப்பாடு மற்றும் அதனை தொடர்ந்து மறுநாள் நவநீத சேவை (வெண்ணெய்தாழி உற்சவம்) நடைபெற்று வருகிறது.
அதைப்போல் இந்தாண்டும் 25 பெருமாள்கள் கருட சேவை புறப்பாடு நேற்று நடைபெற்றது அதனை தொடர்ந்து இன்று 16 பெருமாள் (கிருஷ்ணர் ) நவநீத சேவை அதி விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை கோலிலிருந்து திவ்யதேச பெருமாள்களுடன் பல்லக்குகளில் புறப்பட்டு ஸ்ரீநீலமேகப்பெருமாள்,ஸ்ரீநரசிம்மபெருமாள், ஸ்ரீமணிகுன்னப் பெருமாள், ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீயாதவ கண்ணன், ஸ்ரீரெங்கநாத பெருமாள், ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீபிரசன்ன வெங்கடேசபெருமாள், ஸ்ரீவரதராஜ பெருமாள் உள்ளிட்ட 16 பெருமாள் கோவில்களிலிருந்து கிருஷ்ணர் வெண்ணெய் குடத்துடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முன் அலங்கார சேவை மற்றும் பின் கூந்தல் அலங்கார சேவையுடன் புறப்பட்டு தஞ்சை நகரின் முக்கிய ராஜவீதிகளான கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய தேரோடும் ராஜவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தனர்.
இந்த வெண்ணெய்தாழி உற்சவத்தில் பஜனை பாடல்களை பாடியபடி பக்தர்கள் சென்றனர். இந்த நவநீத சேவையை ஏராளமான பொதுமக்கள்,பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


