பாத்திமா பீபி 1447 வது கண்டு கந்தூரி விழா. கொடியேற்றி சந்தனம் பூசப்பட்டது. சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகரில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் என்று அழைக்கப்படும் ஹசரதா சையதா பாத்தீமா பீபி சாஹிபா தர்கா அமைந்துள்ளது.
இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் பாத்திமாபீபி தர்காவில் இன்று இரவு 1447 வது சந்தனக்கூடு எனப்படும் கந்தூரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி தர்காவின் பரம்பரை டிரஸ்டி சையது ஜீலானி சாகிப் தலைமையில் கொடியேற்றப்பட்டது.

பின்னர் பாத்தியா ஓதப்பட்டு அங்குள்ள சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மலர் போர்வை போர்த்தி வழிபாடு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த கந்தூரி விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் பெருமளவில் திரண்டு பாத்திமாபீபி தர்காவில் வணங்கினர். பின்னர் அங்கு வழங்கப்படும் பிரசாதத்தை எடுத்துச் சென்று சாப்பிட்டனர்.
இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்துக்களும் திரளாக கலந்து கொண்ட இந்த விழா சமூக, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்ந்தது.


