சுவாமி நெல்லையப்பா் – காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் கையில் திருவோடுடன் கங்காள நாதர் திருவீதி உலா.
அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் – காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா 8ம் திருநாளில் தங்க சப்பரத்தில் கையில் திருவோடுடன் கங்காள நாதர் எழுந்தருளி திருவீதி உலா. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
திருவிழாவில் 8ம் திருநாளான இன்று காலையில் நடராஜா் முதலில் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும் தொடா்ந்து பச்சை சாத்தி அலங்காரத்திலும் காட்சியருளினாா். மாலையில் அன்னபூரணிக்கு காட்சி கொடுக்க முப்புறம் எாித்த சிவபெருமான் தங்க சப்பரத்தில் திாிசடையும் தங்க திருஓடும் கையில் ஏந்தி கங்காளநாதராக காட்சி கொடுத்தாா்.

முன்னதாக சோமவார மண்டபத்தில் வைத்து கங்காளநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கங்காளநாதருக்கு காசு மாலை பவளமாலை தங்க கமண்டலம் உடுக்கை கைதண்டம் காதணி வரிசையுடன் கல் ஆரபணம் மற்றும் குண்டோதரன் தங்க ஓட்டினை தலையில் சுமக்க சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை கங்காளநாதா் திருஓட்டில் செலுத்தினா். பஞ்ச வாத்தியங்கள் முழங்க குடைவரை வாசல் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தங்கச் சப்ரத்தில் எழுந்தருளிய சுவாமி கங்காளநாதா் மங்கள வாத்யங்கள் முழங்க வேதபாராயணம் பாட பன்னிரு திருமுறைகள் ஓத நான்கு ரத வீதிகளிலும் திருவீதி உலா வந்தாா்.
கங்காளநாதா் தாிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு ரத வீதிகளிலும் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். நாளை ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேர் உட்பட ஐந்து தேர்கள் நெல்லை நகர வீதிகளில் வலம் வருகின்றது.


