பாபநாசம் பாபநாச சாமி கோயிலில் சிவராத்திரி திருவிழா
பாபநாசம் பாபநாச சாமி கோயிலில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விழித்திருந்து வழிபட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசம் பாபநாச சாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வந்திருந்த பக்தர்கள் விழித்திருந்து வழிபட்டனர்.
சிவராத்திரியன்று இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவது வழக்கம். இதையடுத்து சிவனடியார்களும், சிவ பக்தர்களும் இரவு முழுவதும் பல சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவர். மேலும் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளும், வழிபாடுகளும் நடைபெறும்.
இதையடுத்து பாபநாசம் பாபநாச சாமி கோயிலில் நேற்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள் வேன்களிலும், பேருந்துகளிலும் வந்த பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
மாலை 5 மணி முதல் கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரதநாட்டியம், சிவதாண்டவம், இசை நிகழ்ச்சி, திரைப்படக் காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.

சிறுவர் சிறுமியர் தாள்களில் நமசிவாய என சிவ மந்திரத்தை எழுதி மனதை ஒருமுகப் படுத்தி சிவனை மனதில் உருவேற்றினர். முதியவர்கள் சிலர் கோயிலின் ஒரு பகுதியில் திரையிடப்பட்ட சிவபுராண பக்தி திரைப்படங்களைப் பார்த்த படி சிவராத்திரியை கழித்தனர்.
இரவு முழுவதும் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் சிவனை வழிபட்டு சிவராத்திரியை கழித்தனர்.
நிகழ்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


