புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலய ஆடிப்பெரு விழா தேரோட்டம்
புதுச்சேரி வீராம்பட்டினம் பிரசித்தி பெற்ற அருள்மிகு செங்கழுநீர் அம்மன் ஆலய ஆடிப்பெரு விழா தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கழுநீரம்மன் ஆலயம் உள்ளது, இந்த ஆலயத்தில் ஆடி மாதம் ஐந்தாம் வெள்ளியில் நடைபெறும் தேரோட்டத்தை பிரஞ்சு ஆட்சிக்காலம் முதலே ஆளுநர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைப்பது வழக்கம்,
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் ஆடி பெருவிழா கொடியேற்றம் கடந்த வாரம் வெகு விமர்சையாக தொடங்கியது, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் அருள்மிகு செங்கழுநீர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக செங்கழுநீரம்மன் ஆலய தேர்த் திருவிழா வெளளிக்கிழமையான இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகிய முக்கிய பிரமுகர்கள், கலந்து கொண்டனர்.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

தேரோட்டமானது வீராம்பட்டினம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது.தேர் திருவிழாவில் சமூக அமைப்புகள் சார்பில் அன்னதானம், தண்ணீர், மோர்ப்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.


