அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் தன் மீத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வரும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் காவல்துறை தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி ஷாலினி சிங் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையின் கண்காணிப்பை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். தேவைப்படும் இடங்களில் ட்ரோன் மற்றும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்தை சரிசெய்ய கூடுதலாக 200 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவர்,
சட்டம் ஒழுங்கு, இரவு ரோந்து பணிகளில் ஈடுபட கூடுதல் காவலர்களை நியமிக்கப்பட உள்ளனர் என்றும், காவல்துறையில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கும், பதவி உயர்வு அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது.
கொலை குற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றனர். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மழைகாலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்துறையில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க ஒப்பந்த முறையில் பணியாளர்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்த அவர், தன்னுடைய அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருவதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார்.


