புதுச்சேரி அரசு மின்சாரப் பேருந்து ஓட்டுநர்கள் பி.எப், இ.எஸ்.ஐ. பணம் பிடித்தம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்க கோரி பேருந்துகளை இயக்காமல் திடீரென வேலைநிறுத்த போராட்டம்
புதுச்சேரி அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பங்களிப்புடன் ரூ.23 கோடியில் 25 மின்சார பேருந்துகள் நவம்பர் மாதம் முதல் இயக்கப்படுகின்றன.
இந்த மின்சார பேருந்துகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஊதிய பிரச்சனை, பி.எப் பிடிக்காத நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று மீண்டும் அரசு மின்சார பேருந்து ஊழியர்கள் தங்களுக்கு பி.எப், இ.எஸ்.ஐ பணம் பிடித்தம் செய்யாத நிர்வாகத்தை கண்டித்தும்.
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியும், 6 மாதத்திற்கு பிறகு தான் பிடித்தம் செய்யப்படும் என நிர்வாகம் கூறியதால் நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் இன்று காலை முதல் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களிடம் பிடித்தம் செய்யப்படும் பி.எப். பணத்தை பி.எப் அலுவலகத்தில் கட்டவில்லை என்றால் தற்பொழுது வழங்கப்படும் 23 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பிடித்தம் செய்யாமல் முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்..
இதனால் மின்சார பேருந்துகள் அனைத்தும் தாவரவியல் பூங்கா எதிரே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


