பனிமய மாதா பேராலய 443ஆம் ஆண்டு திருவிழா பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய 443ஆம் ஆண்டு திருவிழா நாளை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தூத்துக்குடியில் நாளை 26ஆம் தேதி இரவு 8 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பொதுமக்களை கண்காணித்து வருகின்றனர்.
கடலோர பகுதியிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா ஜூலை 26-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு திருப்பலி நடந்தது. 6 மணிக்கு பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் பவனியாக எடுத்துச் சென்றனர்.

மேலும், நேர்ச்சையாக கொடிகளை காணிக்கை செலுத்துவோர் கொடிகளை தட்டுகளில் ஏந்தி சென்றனர். அதுபோன்று பக்தர்கள் கல்வி உபகரணங்கள், ஏழைகளுக்கு வழங்கக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காணிக்கை பொருட்களையும் பவனியாக கொண்டு சென்றனர்.
இந்த கொடி பவனி செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக, தூய பனிமய மாதா ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு அருட்தந்தையர்கள் கொடிகள் மற்றும் காணிக்கைகளை பெற்றுக் கொண்டு மக்களை ஆசீர்வதித்தனர்.


