நாகூர் நாகநாத சுவாமி ஆலய தேரோட்டம்
பிரசித்திபெற்ற நாகூர் நாகநாத சுவாமி ஆலய தேரோட்டம் கோலாகலம் ; மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இஸ்லாமியர்களை கௌரவித்து விழா குழுவினர் நெகிழ்ச்சி

நாகை மாவட்டம் நாகூரில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு நாகவல்லி சமேத நாகநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் பிரம்மோற்சவ விழா கடந்த ஜூலை 1 ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக துவங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து சிவ வாத்தியங்கள் முழங்க தியாகேசபெருமான் திருத்தேரில் எழுந்தருளினார். நாகூர் தேரடி வீதியில் தொடங்கிய திருத்தேரினை இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் இராணி மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரில் அமர்ந்திருந்த நாகநாத சுவாமிகளுக்கு பூஜை செய்து ஆரூரா தியாகேசா என பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வர, தேரானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறது முன்னதாக மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர்.

மேலும், தேரோட்ட விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு மாலை அணிவித்து விழா குழுவினர் மரியாதை செய்தது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


