தேர்தல் நடத்தை விதிகள் அமல் – ‘C-VIGIL மூலம் புகார் வந்தால் 100 நிமிடங்களில் தீர்வு: கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, கடலூர் மாவட்டத்திற்கான தேர்தல் கால அட்டவணை மற்றும் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்தியாளர் சந்திப்பின் மூலம் விளக்கினார்.
இம்மாவட்டத்தில் மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறும். வேட்புமனுக்கள் ஏப்ரல் 7-ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டு, ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள கட்சிப் பெயிண்டிங்குகள், போஸ்டர்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இதற்காகத் துறைவாரியாகக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் மொத்தம் 20,23,205 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 2,590 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; இதில் 9 வாக்குச்சாவடிகள் முழுமையாகப் பெண் அலுவலர்களாலும், ஒரு வாக்குச்சாவடி.
மாற்றுத்திறனாளிகளாலும் நிர்வகிக்கப்பட உள்ளது சிறப்பு அம்சமாகும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100% நேரடி இணையக் கண்காணிப்பு (Webcasting) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க மாவட்டம்.
முழுவதும் 81 பறக்கும் படைகள் மற்றும் 81 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றன. உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணமோ அல்லது 10,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களோ கொண்டு செல்ல அனுமதியில்லை.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1800 425 0037 என்ற கட்டணமில்லா எண்ணையும், 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணையும்,
தொடர்பு கொள்ளலாம். மேலும், ‘C-VIGIL’ செயலி மூலம் வரப்பெறும் புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.
85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விருப்பப்பட்டால் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


