கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெலிங்டன்ஏரி நீர்த்தேக்கம் 130 கோடி மதிப்பில் புரனமைப்பு பணியினை அமைச்சர் சி வி கணேசன் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பழமையான வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் கரை மற்றும் பிரதான கால்வாயினைப் புனரமைத்து மேம்படுத்தும் பணி ₹130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று துவக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இந்தப் பணியைத் துவக்கி வைத்தார்.
திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களின் 30,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பாசன வசதியை அளிக்கும் முக்கிய வாழ்வாதாரமான இந்த நீர்த்தேக்கத்தின் புனரமைப்புப் பணிகள், மழைநீரைச் சேமிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
நிதி நெருக்கடியிலும் கடந்த நான்கு ஆண்டு காலமாகப் போராடி ₹130 கோடி நிதியைப் பெற்றதாக அமைச்சர் பெருமிதம் கொண்டார். மேலும், விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட, காவிரி உபரி நீரை வசிஷ்ட நதி மூலம் நீர்த்தேக்கத்துடன் இணைத்து இருபோக சாகுபடிக்கு வழிவகை செய்யக் கோரும் நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சரிடம் கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்


