ஆர்.எஸ். மங்கலத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகமூடி அணிந்த மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் சொல்லொணா அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆர்.எஸ். மங்கலம் அருகேயுள்ள கீழக்கோட்டை பகுதியில் அர்ச்சுனன் என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 160 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்தும், குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீசார் இன்னும் திணறி வருவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, தற்போது வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்புப் பகுதிகளில்: ஐந்து முகமூடி கொள்ளையர்கள் கைகளில் கொடூர ஆயுதங்களுடன் தெருக்களில் உலா வருவது.வீடுகளின் கதவுகளை உடைக்க முயற்சிப்பது.
மறைந்திருந்து நோட்டமிடுவது. கேமிராக்களை கண்டவுடன் முகத்தை காட்டாமல் இருக்க தலையை குனிவது போன்ற அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் அரசு அலுவலகமான வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே இத்தகைய துணிகரச் செயல்கள் நடப்பது காவல்துறையின் ரோந்துப் பணியையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
கையில் கூர்மையான ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சுற்றித் திரிவதால், இரவு நேரங்களில் மக்கள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.
உடனடியாக மாவட்ட காவல்துறை தலையிட்டு, இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தவும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


