செஞ்சி அருகே மின்சாரம் தாக்கியதில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மழவந்தாங்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகன் லோக் பிரதீப்(13) என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்ற அவர் பள்ளி அருகே உள்ள பொது கழிவறை கட்டிடத்தின் மேல் ஏறி அருகில் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
அப்பொழுது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயிர் அழுத்த மின் கம்பி லோக் பிரதீப் மீது உரசி மின்சாரம் தாக்கி அங்கேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கண்டாச்சிபுரம் காவல்துறையினர் மாணவன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


