குழந்தைகளுக்கான சிகிச்சை மையத்தை தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனர் டாக்டர் அருண் தம்புராஜ் துவக்கி வைத்தார்
சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனி சிகிச்சை மையம் உள்ளது. இந்நிலையில் வகை 1 நீரிழிவு நோயினால் உடலில் இன்சுலின் சுரக்காத குழந்தைகளுக்கான தனி சிகிச்சை மையம் இன்று துவக்கப்பட்டது.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், இதயங்கள் காப்போம் அறக்கட்டளையின் சார்பில் கோவை மெட்ரோ டைனமிக் ரோட்டரி கிளப் உதவியுடன் இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
இதற்காக கோவை மெட்ரோ டைனமிக் ரோட்டரி கிளப் சார்பில் சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த மையத்திற்கான சிகிச்சை மையம் திறப்பு விழா இன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை மைய வளாகத்தின் முதல் முதல் தளத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவ மையம், தேசிய சுகாதார திட்டம் மற்றும் இதயங்கள் காப்போம் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட இந்த மையத்தின் திறப்பு விழாவிற்கு தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார்.
மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப்பிரிவுத்துறை தலைவர் டாக்டர். ராமநாதன் வரவேற்று பேசினார். இதயங்கள் காப்போம் அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மகேந்திரன், கோவை மெட்ரோ டைனமிக் ரோட்டரி கிளப் தலைவர் மகேஷ் பிரபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனர் டாக்டர் அருண் தம்புராஜ் இந்த சிகிச்சை மையத்தை துவக்கி வைத்து அது செயல்படும் விதம் குறித்து விளக்கினார்.
இந்த சிகிச்சை மையத்தில் இன்சுலின் தேவைப்படும் குழந்தைகள் இங்கு வந்து பதிவு செய்து, இன்சுலின் பெற்றுக் கொண்டு அதை செயல்படுத்தும் விதம் குறித்தும், எந்த மாதிரியான ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை பெற்றுச் செல்லலாம் என அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நலப்பிரிவுத்துறை தலைவர் டாக்டர் ராமநாதன் தெரிவித்தார்.


