உங்களது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்
அரசு பள்ளி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேச்சு
பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பூந்தமல்லி, மாங்காடு, சென்னீர்குப்பம், திருவேற்காடு, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். 1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரான பூந்தமல்லி கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சொ. கற்பகம் வரவேற்று பேசினார்.
உயர்நீதிமன்ற நீதியரசர்(ஓய்வு) ஞானப்பிரகாசம் வாழ்த்திப் பேசினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் கண்காட்சியை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பின்னர் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:
இந்த பள்ளி வளாகத்திற்கு முன்னாள் முதலமைச்சர்கள் பக்தவச்சலம், அண்ணாதுரை, எம்ஜிஆர், கலைஞர் வந்து சென்றனர் என்பதன் மூலம் இந்தப் பள்ளியின் பெருமையை உணர முடிகிறது.
தற்போது தமிழ்நாட்டில் 2211 பள்ளிகள் நூற்றாண்டை கொண்டாடி கொண்டு இருக்கின்றன. இங்குள்ள பெண்கள் பள்ளிக்கு கலைஞர் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று முதல்வரின் கலைஞரின் பெயரை வைக்க பாடுபடுவேன். மாணவர்களின் பெற்றோருக்கு நான் வைக்கும் வேண்டுகோள், மற்ற பிள்ளையுடன் நமது பிள்ளைகளை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
இங்கு படிக்கும் மாணவர்கள் வரும் காலங்களில் நீங்கள் இந்தப் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும்.
நீங்கள் படித்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எங்களது ஆசை. பள்ளிக்கு போவது அவசியம். டெக்னாலஜியை நிறைய தெரிந்து கொள்ளுங்கள். அதனால் தான் தமிழ்நாட்டு முதலமைச்சர் டெக்னாலஜி சார்ந்து நிறைய நம்முடைய மாநிலத்திற்கு நிறைய திட்டங்களை தொடர்ந்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்.
உங்களுக்கு உறுதுணையாக நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களும், நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் என்றைக்குமே இருப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.


