சினிமாவில் நடிகனாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை
சினிமாவில் நடிகனாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை எல்லாம் கஷ்டம் தான். நல்லது செய்தால் காழ்ப்புணர்ச்சியில் நான்கு பேர் பலவிதமாக பேச தான் செய்வார்கள் அவர்களை நினைத்தால் நல்லது செய்ய முடியாது என்று நெல்லையில் நடிகர் சூரி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
நடிகர் சூரி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள மாமன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது எனவே ஒவ்வொரு மாவட்டமாக சென்று சூரி ரசிகர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நடிகர் சூரி இன்று நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் உள்ள பாம்பே திரையரங்கிற்கு வருகை தந்தார். அவரை திரையரங்க நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து மாமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் சூரி கேக் வெட்டினார்.
பின்னர் திரையரங்கிற்குள் சென்று மாமன் படம் பார்த்து கொண்டிருந்த பொதுமக்களை சந்தித்தார். பின்னர் மாமன் படம் பார்க்க வந்திருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு நடிகர் சூரி நலத்திட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார். படத்தின் வெற்றியை பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
முன்னதாக சூரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாமன் படத்தை குடும்பத்தோடு மக்கள் பார்க்க வருவதை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாகிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தை பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் அழாமல் இருக்க முடியாது. நல்ல திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளதாக கருதுகிறேன். கதை எனக்கு சரியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக புதுமுக இயக்குனர்களுடன் நடிப்பேன் பெரிய இயக்குனர் புதிய இயக்குனர் என்று வித்தியாசம் கிடையாது. புது இயக்குனரை யாரும் புறக்கணிப்பது கிடையாது.
தக் லைப் படத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் வில்லன் கதாபாத்திரமாக மாற வாய்ப்பு வாய்ப்புகள் வரவில்லை. வந்தால் பார்க்கலாம். நல்ல கதையில் யார் நடித்தாலும் மக்கள் கொண்டாடுவார்கள். சினிமாவில் நடிகனாக இருப்பது சாதாரண விஷயம் இல்லை எல்லாம் கஷ்டம் தான் காமெடியன்களும் நடிகர்கள் தான் புதிய புதிய காமெடி நடிகர் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சந்தானத்துடன் இணைந்து நடிப்பேனா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்கு கவனிக்க வேண்டும். தயவு செய்து இளைஞர்கள் யாரும் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்றார்.
தொடர்ந்து நடிகர் சூரி உணவகம் குறித்து அடுத்தடுத்து சர்ச்சை எழுவது குறித்த கேள்விக்கு, நல்லது செய்து கொண்டு இருந்தால் சிலர் காழ்ப்புணர்ச்சியில் பேச தான் செய்வார்கள் நான்கு பேர் பேசுகிறார்கள் என்று நினைத்தால் நல்லது எதுவும் செய்ய முடியாது. பேசுபவர்கள் எது வேண்டுமானாலும் பேசட்டும் என்றார்.