நெல்லை பாளையங்கோட்டை என இரு நகரங்களை இணைக்க தனிநபர் நிதியில் கட்டி முடிக்கப்பட்டு அவர் பெயரே சூட்டப்பட்ட சுலோச்சனா முதலியார் ஆற்றுப்பாலத்தின் 182 வது ஆண்டுவிழா கல்வெட்டிற்கு மாலைகள் அணிவித்து, மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது….
நெல்லை மற்றும் பாளையங்கோட்டை என இரு நகரங்களை இணைக்கும் தாமிரபரணி ஆற்றை கடக்க அக்காலத்தில் மக்கள் பரிசல் மூலமாகவே பயணப்பட்டுள்ளனர். அவசர மருத்துவத் தேவை தொடங்கி கல்வி உட்பட பல்வேறு தேவைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அப்போதைய திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் சிரஸ்தாரராக பணியாற்றிய சுலோச்சன முதலியார், தனது சொந்த நிதியிலிருந்து 50,000 பணத்தை செலவழித்து பாலம் கட்ட முடிவு எடுத்தார். நிதி பற்றாக்குறைக்கு அவரது மனைவி வடிவாம்பாள், தனது நகை முழுவதையும் கொடுத்து உதவினார். இவ்வாறு இரண்டு கருணை உள்ளங்களின் முயற்சியில் உருவானது நெல்லை பாளையங்கோட்டை என இரு நகரங்களை இணைக்கும் ஆற்றுப்பாலம். இதற்கு வழி வகுத்த சுலோச்சனா முதலியார் பெயரையே பாலத்திற்கு சூட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது.
1840 ம் ஆண்டில் பாலம் கட்டும் பணி தொடங்கி 1843 ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி சுலோச்சனா முதலியார் ஆற்றுப்பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் யானை, குதிரைகள் புடை சூழ சுலோச்சன முதலியார் முன் நடக்க மக்கள் பயணம் தொடங்கியது. 1843 ல் தொடங்கி தற்போது 182 வது ஆண்டை கொண்டாடும் விதமாக நெல்லை மாநகர மேயர் ராமகிருஷ்ணன் மற்றும் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என்ன பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு ஆற்றுப்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டிற்கு மாலை அணிவித்து தாமிரபரணி ஆற்று பாலத்தில் நின்று ஆற்றில் மலர்களை தூவினர். ஆற்றுப் பாலத்தில் கடந்து வந்த பேருந்து மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
தனி நபர் நிதியால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரமாக கிடைக்கப்பெற்ற இந்த பாலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சிதிலமடைந்த பகுதிகளை சீரமைத்து வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரித்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கொண்டாட வேண்டும் என்பதே நெல்லை மாவட்ட மூத்த குடி மக்களின் எதிர்பார்ப்பு.


