அதிமுகவில் கிளர்ச்சி: வேட்பாளர் மாற்றம் கோரி நிர்வாகிகள் ராஜினாமா எச்சரிக்கை.
நாமக்கல் சட்டசபை தொகுதியில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால், தங்கள் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற மாநகர செயலாளர் பாஸ்கர், 2021 தேர்தலில் தோல்வியடைந்தார்.
இம்முறை மீண்டும் போட்டியிட அவர் கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வந்தார்.தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பாஸ்கர் ஆதரவாளர்களுடன் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
கோயில்களில் கிடா விருந்து நடத்துதல், தேர்தல் அலுவலகம் அமைத்தல், வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், நாமக்கல் தொகுதி பாஸ்கருக்கு வழங்கப்படாமல், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ். மோகனுக்கு ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கோபி, மோகனூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 39 வார்டு செயலாளர்கள் அவசரக் கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், நாமக்கல் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், மாற்றம் செய்யப்படாவிட்டால் அனைவரும் தங்கள் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், பாஸ்கர் ஆதரவு நிர்வாகிகளின் கூட்டம் நாளை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாமக்கல் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


