கர்நாடக அரசின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தி டெல்டா மாவட்டத்தை காப்பாற்றிய இயக்கம் வைகோ பெருமிதம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மதிமுக பேரூர் நிர்வாகி இல்ல திருமண விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசியது: உலகின் தொன்மையான நகரம் பூம்புகார் என தற்போது கண்டறிந்துள்ளனர்.உலகில் யாரும் ஆடைகள் அணியாமல் காட்டுமிராண்டிகள் போன்று இருந்த காலத்திலேயே நெசவுத் தொழிலில் கைதேர்ந்து சிறந்த பட்டாடைகளை உருவாக்கியவர்கள் தமிழர்கள்.
சமைக்காத பச்சை மாமிசத்தை சாப்பிட்டு மனிதர்கள் வாழ்ந்து வந்த காலத்திலேயே அறுசுவை உணவு சமைத்து உண்டு,அதனை விருந்தினர்களை

அழைத்து பரிமாறி விருந்தோம்பல் செய்தது தமிழர்கள் தான்.தெற்காசிய நாடுகள் பலவற்றை சோழர்கள் வெற்றி கொண்டனர்.
ஆனால் தமிழர்கள் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை யாரையும் அடிமைப் படுத்தவில்லை. கடலில் மரக்கலன்கள் செலுத்துகின்ற காலத்தை எகிப்தியர்கள், ரோமானியர்கள் எண்ணிப்பார்த்திராத காலத்திலேயே பெரிய கப்பல்களை கடலில் உலாவ செய்தவர்கள் தமிழர்கள்.குட ஓலை முறையில் தலைவர்களை தேர்ந்தெடுத்து ஜனநாயக முறையை முதலில் அறிமுகப்படுத்தியது தமிழர்கள் தான்.
அத்தகைய சிறப்புகள் வாய்ந்த தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாடு தற்போது பாலைவனமாகும் ஆபத்து உள்ளது.கர்நாடகா அரசு மேகதா 2வில் காவிரியின் குறுக்கே அணை கட்டி விட்டால் காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வந்து சேராது.மழை மட்டுமே வளப்படுத்தி விட முடியாது.ஜீவன் நதியான காவிரியில் பாய்ந்து வரும் தண்ணீர் லட்சக்கணக்கான விளைநிலங்களுக்கு பயன்படும்.
இதனால் தான் கரிகாற்சோழன் தண்ணீரை ஓரிடத்தில் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பாசனத்துக்கு பயன்படுத்த கல்லணையை கட்டினான்.
கல்லணையை பார்வையிட்ட ஜெர்மனியர்கள் ஆச்சரியப்பட்டனர்.
2000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்த அணையின் தொழில்நுட்பம் போல உலகில் வேறு எங்கும் கிடையாது என வியந்தனர்.
அந்த காலத்தில் கர்நாடகவில் அணைக்கட்ட முயன்ற போது ராஜேந்திர சோழன் படை எடுத்துச் சென்று அந்த அணையை உடைத்து நொறுக்கிய வரலாறு உண்டு.
இப்போது அதை செய்ய முடியாது. ஆனால் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துவிட்டது.மேகதாட்டில் 48 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க பார்க்கிறார்கள்.இதனை தடுப்பதற்காக, காவிரி பாதுகாப்பு அமைப்பு என்ற இயக்கத்தை உருவாக்கி ஊர் ஊராக சென்று இந்த அபாயத்தை தடுக்க அணை கட்டுவதற்கு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினேன்.
இதன் மூலம்,டெல்டா மாவட்டத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்றி தந்தது மதிமுக என பெருமையுடன் தெரிவித்து பேசினார். அப்போது அதிமுக துணை பொதுச்செயலாளர் முருகன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
