கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.
கோடை காலம் தொடங்கும் முன்னரே வேகமாக வறண்டு வரும் வீராணம் ஏரி, ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னை குடிநீருக்கு அனுப்பும் தண்ணீர் அளவு வினாடிக்கு 41 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ளது மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி. இந்த ஏரி சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது மேலும் இந்த பகுதி விவசாயிகள், உள்நாட்டு மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
மேலும் இந்த ஏரிக்கு தண்ணீரானது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது.
இது தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது.

இருப்பினும் பிரதான நீர் வடவாறு வழியாகவே வருகிறது. இந்த ஏரியை நம்பி சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகின்றது. கடந்த 1967-ம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் 2004-ம் ஆண்டிலிருக்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 73 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
தற்போது அதனை குறைத்து அதில் பாதியாக அதாவது 41 கன அடி தண்ணீர் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் வருகின்ற கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது முழுவதுமாக நிறுத்தப்படும் என தெரிகிறது.அதேசமயம் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால்கள் துர்ந்து போயுள்ளதே காரணமென விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கடுமையாக சரிந்து வருகிறது.
ஏரிக்கு நீர் வரத்து 180 கன அடியே உள்ளது, ஏரியின் நீர்மட்ட அளவான 47.50 அடியில் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்னரே
45 அடி நீர் மட்டுமே உள்ளது.
ஆகவே பொதுப்பணி அதிகாரிகள் முன்கூட்டியே தண்ணீரை தேக்கி கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

